தேர்தலைத் தீர்மானிக்க ரில்வின் சில்வா யார்? — நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கொந்தளிப்பு
இலங்கையில் தேர்தல்களை நடத்துவது குறித்த இறுதி முடிவுகளை நாட்டின் நாடாளுமன்றமும், சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுமே எடுக்க வேண்டுமே தவிர, ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் அதைத் தீர்மானிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பானந்துரையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜே.வி.பி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது தேர்தல் குறித்து வெளியிட்டிருந்த கருத்துக்களைப் பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்தார்.
இந்த ஆண்டில் தேர்தல் நடக்குமா இல்லையா என்று அறிவிக்க அத்தகைய செயலாளர்களுக்கு எந்தவொரு சட்டபூர்வ அதிகாரமும் இல்லை என்றும், அனைத்து முடிவுகளும் அரசியலமைப்பு நிறுவனங்கள் மூலமாகவே எடுக்கப்பட வேண்டும் என்றும் நாமல் வலியுறுத்தினார்.
தொடர்ந்து தற்போதைய திஸாநாயக்க அரசு குறித்துப் பேசிய நாமல் ராஜபக்ச, இளைஞர்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை அளித்தே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாகக் குற்றம் சாட்டினார்.
அந்நியச் செலாவணி வரவு, வாகனச் சலுகைகள், பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு போன்ற வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்றார்.
மேலும், நாட்டின் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்திடம் முறையான திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி அடைவது குறித்து அரசாங்கத்தின் அமைச்சர்களே பரஸ்பர முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் கூறி நாமல் ராஜபக்ச அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.





