17 லட்சம் சம்பளம்; ஆனால் நிம்மதி இல்லை! 10 நிமிட மதிய உணவு இடைவேளை வேலையை உதறித்தள்ளிய இளைஞன்
ஐஐடி டெல்லி (IIT Delhi) பட்டதாரியான 24 வயது சிராக் மதன், கார்ப்பரேட் வங்கித் துறையில் பணியாற்றி வந்தார்.
ஆரம்பத்தில் நிம்மதியாகத் தெரிந்த வேலை, நாளடைவில் பெரும் சுமையாக மாறியுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருந்த வேலை நேரம், இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டதுடன், வாரத்தில் 6 நாட்கள் உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதில் உச்சக்கட்டமாக, மதிய உணவு உண்பதற்கு வெறும் 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டதோடு, மருத்துவ விடுப்பு எடுப்பதற்குக் கூடப் பல விளக்கங்களை அளிக்க வேண்டிய நெருக்கடி இருந்துள்ளது.
சுமார் 10 கோடி ரூபாய் வரையிலான விற்பனை இலக்குகளை (Sales Targets) எட்டுமாறு உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தம், தனது மனநலனைப் பாதித்ததாகச் சிராக் மதன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
“அதிக சம்பளம் தருவதற்காக ஊழியர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதை ஏற்க முடியாது” எனக் கூறி, அவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இவரது பதிவு, கார்ப்பரேட் கலாச்சாரம் மற்றும் ஊழியர்களின் நல்வாழ்வு குறித்துப் புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.




