இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு எச்சரிக்கை! – மே 8 முதல் மெட்டாவின் அதிரடி முடிவு!
இன்ஸ்டாகிராம் தளத்தில் இதுவரை வழங்கப்பட்டு வந்த ‘எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்’ வசதி வரும் மே 8 முதல் நிறுத்தப்படும் என மெட்டா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வசதி நீக்கப்படுவதன் மூலம், பயனர்கள் ஒருவருக்கொருவர் அனுப்பும் செய்திகள் இனி மூன்றாம் தரப்பினரால் அல்லது நிறுவனத்தால் கண்காணிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த மாற்றத்தினால் பாதிக்கப்படும் பயனர்கள், தங்களின் முக்கியமான புகைப்படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை மே 8-ஆம் திகதிக்கு முன்னதாகவே பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளுமாறு மெட்டா அறிவுறுத்தியுள்ளது. பழைய பதிப்பைப் பயன்படுத்தும் பயனர்கள், செயலியைப் புதுப்பிப்பதன் மூலம் மட்டுமே இந்தத் தரவுகளைச் சேமிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகக் குறைவான பயனர்களே இந்த வசதியைப் பயன்படுத்துவதால் இதனை நீக்க முடிவெடுத்துள்ளதாக மெட்டா கூறியிருந்தாலும், அரசாங்கங்களின் அழுத்தம் மற்றும் பாதுகாப்புக் காரணங்களே இதற்குப் பின்னணியில் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும், என்க்ரிப்ஷன் வசதி தேவைப்படுவோர் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியைப் பயன்படுத்துமாறு மெட்டா பரிந்துரைத்துள்ளது.





