தைரியம் இருந்தால் மருத்துவ பரிசோதனைக்கு வாருங்கள்! – தெல்லிப்பழை பொலிஸாருக்கு தாயார் விடுத்த அதிரடி சவால்
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் கடந்த 16-ஆம் திகதி வேலைக்குச் சென்ற 19 வயது இளைஞன் ஒருவரை மறித்த பொலிஸார், அவர் கஞ்சா பாவித்துள்ளதாகக் கூறி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவமானப்படுத்தியுள்ளனர்.
பின்னர் அவரைத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். எனினும், அந்த இளைஞன் எந்தவித போதைப்பொருளையும் பயன்படுத்தவில்லை என மருத்துவ அறிக்கையில் உறுதியாகியுள்ளது.
மருத்துவப் பரிசோதனையில் உண்மை வெளிவந்த பின்பும், “நீ சாராயம் குடித்திருக்கிறாய்” என பொலிஸார் அந்த இளைஞனை மிரட்டியமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஆவேசமாக கருத்துத் தெரிவித்த அந்த இளைஞனின் தாயார், “எனது மகன் குடும்பக் கடனை அடைக்க 19 வயதிலேயே உழைக்கச் செல்கின்றான்.
பொலிஸார் வீதியில் நின்றும் லஞ்சம் வாங்குவார்கள், அவர்களுக்கு மாதச் சம்பளமும் வரும். ஆனால், உழைத்தால் தான் எமக்குச் சோறு” எனப் பொலிஸாரைக் கடுமையாகச் சாடினார்.
மேலும், “தெல்லிப்பழை பொலிஸாருக்கு தைரியம் இருந்தால் வைத்தியசாலைக்கு வாருங்கள், உங்களை முதலில் போதைப்பொருள் பரிசோதனை செய்வோம்” எனப் பகிரங்கச் சவால் விடுத்துள்ளார்.





