அடக்கம் செய்யப்பட்ட முதியவர்; உடன் புதைக்கப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்
உலகெங்கும் மரணச் சடங்குகள் கலாச்சாரத்திற்கு ஏற்ப மாறுபடும். ஆனால், சீனாவில் நடந்துள்ள ஒரு சம்பவம் ஒட்டுமொத்த இணையதளவாசிகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் அண்மையில் காலமானார். ஆடம்பர கார்களைச் சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவருக்கு, மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz S450L) ரக கார் மீது அலாதியான பிரியம் இருந்துள்ளது.
தனது மறைவிற்குப் பின் தனக்குப் பிடித்தமான அந்த காரையும் தன்னுடன் புதைக்க வேண்டும் என்பது அவரது இறுதி ஆசையாக இருந்துள்ளது.
அதன்படி, ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான அந்தச் சொகுசு காரை சவப்பெட்டியாகப் பயன்படுத்தி, அதனுள்ளேயே முதியவரின் உடலை வைத்து அவரது குடும்பத்தினர் புதைத்துள்ளனர்.
முதியவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்ததாக குடும்பத்தினர் தெரிவித்த போதிலும், முறையான அனுமதியின்றி காரைப் புதைத்ததற்காக சீன அரசு அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளது.




