வாகன உரிமையாளர்களுக்கு நற்செய்தி! இலங்கையிலும் அறிமுகமாகிறது பெயர் பொறித்த இலக்கத் தகடுகள்
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தனது தற்போதைய கணினி அமைப்பை நவீனப்படுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், வாகன உரிமையாளர்கள் தங்களது பெயர்களைக் கொண்ட தனிப்பயனாக்கப்பட்ட இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தத் தீர்மானித்துள்ளதாகத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றக் குழுவிடம் இது தொடர்பான விபரங்களைப் பகிர்ந்து கொண்ட அதிகாரிகள், பழைய நடைமுறையில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல்களை நீக்கி, சர்வதேச தரத்திற்கு இந்த முறையை மாற்றவுள்ளதாகத் குறிப்பிட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் நடைமுறையில் இருப்பதைப் போன்றே, உரிமையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பெயர்களைத் சூட்டிக்கொள்ளும் இந்த வசதி, கணினி அமைப்பு மேம்படுத்தப்பட்ட ஆறு மாத காலத்திற்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இதற்கான மென்பொருள் தயாரிப்பு மற்றும் தரவுப் பரிமாற்றப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது, வாகன உரிமையாளர்கள் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தித் தங்களுக்குப் பிடித்தமான பிரத்யேக இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.




