கிளிநொச்சியில் பயங்கரம்: 50 ஆயிரம் ரூபாவுக்குத் தனது குழந்தையையே விற்ற தாய்!
கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னை நீராவிக் கிராமத்தில், ஒன்றரை வயதுப் பெண் குழந்தையை அதன் தாயே 50 ஆயிரம் ரூபாவுக்கு விலைபேசி விற்ற சம்பவம் நேற்று (26) வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தர்மபுரம் 7-ஆம் யுனிற் பகுதியைச் சேர்ந்த குறித்த தாய் மற்றும் இந்த விற்பனைக்கு இடைத்தரகராகச் செயற்பட்ட நபர் ஆகியோரைத் தர்மபுரம் பொலிஸார் இன்று அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் போது, அதிர்ஷ்டவசமாகக் குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குழந்தை தற்போது மருத்துவப் பரிசோதனைக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குழந்தையை விற்பனை செய்தமை தொடர்பான கடிதமும், சில புகைப்படங்களும் வெளியாகிப் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
வறுமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் கடத்தல் கும்பல் உள்ளதா? என்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




