காசாவில் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதல்
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த மூன்று வருடங்களாகத் தொடரும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலி எண்ணிக்கை 72,500-ஐக் கடந்துள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.
இதில் பாதிக்கும் மேற்பட்டோர் அப்பாவிப் பெண்களும் குழந்தைகளும் என்பது உலக நாடுகளைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், அதனைச் சற்றும் பொருட்படுத்தாத இஸ்ரேலியப் படைகள் இன்றும் காசா முழுவதும் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
கடந்த சில மணிநேரங்களில் மட்டும் காசாவில் ஒரு பெண் உட்பட 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கான் யூனிஸ் பகுதியில் வாகனம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் உயிரிழந்தனர்.
அல்-முக்ராக், பெய்ட் லஹியா மற்றும் காசா நகரின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுவீச்சில் மேலும் பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
குடியிருப்புப் பகுதிகள் மற்றும் காவல் அதிகாரிகளைக் குறிவைத்தும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





