அம்மன் என்னை தேர்ந்தெடுத்தார்! – வாராஹி வழிபாட்டில் உருகிய ஸ்ருதி ஹாசன்!
‘7-ஆம் அறிவு’ படத்தில் தொடங்கி, விஜய், அஜித், தனுஷ் எனப் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த ஸ்ருதி ஹாசன், கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டாருடன் ‘கூலி’ படத்தில் நடித்துப் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
தற்போது விஜய் சேதுபதியுடன் ‘ட்ரெயின்’ மற்றும் பிரபாஸுடன் ‘சலார் 2’ எனப் பிஸியாக இருக்கும் ஸ்ருதி, சமீபத்திய பேட்டி ஒன்றில் வாராஹி அம்மன் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.
“கடவுளை நாம் தேர்ந்தெடுப்பதில்லை, கடவுள்கள்தான் நம்மைத் தேர்ந்தெடுக்கிறார்கள்” என அவர் கூறியுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் வாராஹி அம்மன் கோவிலுக்குச் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்துள்ள அவர், அங்கு எவ்வித ஆடம்பரமோ, விஐபி வரிசையோ இல்லாத சூழலில் அந்தத் தெய்வத்தின் அபாரமான சக்தியைத் தான் உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.
வாராஹி அம்மன் தனது வாழ்க்கைக்குள் வந்த பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அந்தச் சின்னஞ்சிறு கோவிலில் கிடைத்த அமைதி ஈடுஇணையற்றது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ருதி ஹாசனின் இந்த ஆன்மீகப் பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.




