அமெரிக்க நிலைகள் மீது நீண்ட கால வலிமிகுந்த தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுடன் தொடங்கிய போர், ஏப்ரல் 8 முதல் போர்நிறுத்தத்தில் இருந்தபோதிலும் பதற்றம் தணியவில்லை.
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா கடற்படை மூலம் முற்றுகையிட்டதற்குப் பதிலடியாக, ஈரான் இப்போதும் ஹோர்முஸ் நீரிணையை மூடி வைத்துள்ளது.
இதனால் உலகின் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் முடக்கப்பட்டுள்ளது. மீண்டும் தாக்குதல்கள் தொடங்கினால், அமெரிக்க நிலைகள் மீது நீண்ட கால மற்றும் வலிமிகுந்த தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
அணுசக்தி விவகாரங்களில் ஈரானைப் பணிய வைக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது புதிய இராணுவத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கான பாதுகாப்பு ஆலோசனைகள் இன்று நடைபெறவுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 126 டொலர்கள் வரை உயர்ந்துள்ளது.
இது உலகளாவிய பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமைதிப் பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டையைச் சந்தித்துள்ளதால், மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.





