மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம்: அநுரவின் மே தின எச்சரிக்கைக்கு நாமல் பதிலடி
களனி விகாரையில் நேற்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, அரசாங்கம் தற்போது அடக்குமுறையை ஏவிவிட்டுள்ளதாகச் சாடினார்.
யாரைச் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிப்பதற்குப் பதிலாக, தேசிய மக்கள் சக்தியின் பெலவத்த அலுவலகமே தீர்மானிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.
தொழிலாளர் உரிமைகள் குறித்துப் பேச வேண்டிய மே தின மேடையில், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவது குறித்தே ஜனாதிபதி பேசியதாகவும், இவ்வாறான மிரட்டல்களுக்குத் தாம் அஞ்சப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக நிகழ்ந்த மர்ம மரணங்கள் குறித்தும் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
323 கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் முறைப்பாடளித்த டான் பிரசாத் கொல்லப்பட்டமையும், 2.5 மில்லியன் டொலர் திறைசேரி மோசடி விவகாரத்தில் உதவிப் பணிப்பாளர் உயிரிழந்தமையும் சந்தேகத்திற்குரியவை என அவர் சுட்டிக்காட்டினார்.
அரசின் போலி வாக்குறுதிகளை மக்கள் உணரத் தொடங்கியுள்ளதால், அதிலிருந்து திசைதிருப்பவே இத்தகைய கைது அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும், ஊழல்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம் என்றும் அவர் சூளுரைத்தார்.





