வித்யா படுகொலை வழக்கு – சுவிஸ் குமார் உள்ளிட்ட 4 பேருக்கு மரண தண்டனை உறுதி!
கடந்த 2015-ஆம் ஆண்டு மாணவி வித்யா கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு யாழ். மேல் நீதிமன்ற ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் ஏற்கனவே மரண தண்டனை விதித்திருந்தது.
இதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை இன்று விசாரித்த பிரதம நீதிபதி பத்மன சூரசேன தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பேரின் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பின் போது, சிறையிலிருந்த குற்றவாளிகள் மூவர் ஸூம் தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
நான்கு பேருக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட அதேவேளை, போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் இரண்டு பிரதிவாதிகளை விடுவிப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2015 மே 13-இல் புங்குடுதீவில் நடந்த இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு, 11 ஆண்டுகளுக்குப் பின் இன்று உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.





