யாழ். போதனா வைத்தியசாலையில் அதிகாலை பெரும் தீ விபத்து!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியப் பகுதியில் இன்று (09-05-2026) சனிக்கிழமை அதிகாலை திடீரெனத் தீ பரவியது.
தகவல் அறிந்ததும் வைத்தியசாலை ஊழியர்கள், யாழ். மாநகர சபை தீயணைப்புப் படையினர் மற்றும் முப்படையினர் உடனடியாக விரைந்து செயற்பட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ பரவிய போதிலும், ஒரு தொகுதி மருந்துகள் ஊழியர்களால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளன.
இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, உள்நாட்டு மருந்துக் களஞ்சியம் மற்றும் கிளினிக் மருந்தகங்கள் பாதிக்கப்படவில்லை என்றும், அதனால் மருந்து விநியோகம் வழக்கம் போல் தொடரும் என்றும் உறுதியளித்துள்ளார்.

சேதமடைந்த மருந்துகளின் விபரங்கள் கணக்கிடப்பட்டு வருவதாகவும், மேலதிக மருந்துகளைப் பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





