தொடருந்து தடம் புரண்டு கோர விபத்து! – 12 பயணிகள் காயம்!
பொல்கஹவெலையிலிருந்து இன்று அதிகாலை 3:25 மணிக்குப் புறப்பட்டு, தெற்கு களுத்துறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தொடருந்து, வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின் போது தொடருந்தின் பயணிகள் பெட்டி ஒன்று வீதியை நோக்கித் தலைகீழாகக் கவிழ்ந்ததில், அதில் பயணித்த 12 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர் மேல் சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து காரணமாகப் பிரதான தொடருந்து பாதையின் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், காலை நேரப் பணிக்குச் செல்லும் பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







