அரசாங்கம் பட்டதாரிகள், விவசாயிகள், மீனவர்களை ஏமாற்றிவிட்டது – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
தற்போதைய அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகள் மூலம் ஆட்சிக்கு வந்தாலும், குறுகிய காலத்திலேயே அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட மக்களை ஏமாற்றிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பில் பேசிய அவர், 15,000-க்கும் மேற்பட்ட பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இதுவரை முறையான சேவைப் பிரமாணம், சம்பளத் திட்டம் மற்றும் பதவி உயர்வு முறைமை வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டினார்.
மேலும், சிரேஷ்ட பிரஜைகளின் வட்டி வருமானம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கான உரம், விதை மானியங்கள் மற்றும் உத்தரவாத விலைகள் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் விலை குறைப்பு, மின்கட்டண குறைப்பு மற்றும் அனர்த்த நிவாரண உதவிகள் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், சமூக ஊடகங்கள் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உரிமைகள் தொடர்பாக குரலெழுப்புவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.





