இசைக் கச்சேரியில் பரபரப்பு! 500-க்கும் மேற்பட்ட தலைக்கவசங்கள் மாயம், பொலிஸார் தீவிர விசாரணை
ஹொரணை பொது மைதானத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரிக்குச் சென்ற நூற்றுக்கணக்கானோரின் தலைக்கவசங்கள் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வார இறுதியில் ஹொரணை பொது மைதானத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியைக் காண வந்த பார்வையாளர்கள், வாகனங்களை நிறுத்திய பின்னர் தரிப்பிடக் கட்டணம் வசூலித்த பெண்ணிடம் தங்களது தலைக்கவசங்களை ஒப்படைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கச்சேரி முடிந்து தலைக்கவசங்களைப் பெற வந்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 500 தலைக்கவசங்கள் காணாமல் போயிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சியடைந்து ஹொரணை தலைமையக பொலிஸில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
இதுவரை 70-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஹொரணை வாராந்த சந்தையில் பணிபுரியும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், பாதுகாப்பு கேமரா காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்து, தலைக்கவசங்கள் எவ்வாறு மாயமானது மற்றும் இதன் பின்னணியில் வேறு நபர்கள் உள்ளனரா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





