வீதியில் கிடந்த தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞன் – சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நெகிழ்ச்சிச் சம்பவம்!
யாழ்ப்பாணம் – சுன்னாகம் வர்த்தக வங்கிக்கு முன்பாக நேற்று பெறுமதியான தங்க ஆபரணம் ஒன்று கீழே விழுந்து கிடந்துள்ளது.
அந்த வழியாகச் சென்ற குப்பிளான் பகுதியைச் சேர்ந்த செல்வராசா பார்த்தீபன் என்ற இளைஞர், அந்த நகையை எடுத்து உடனடியாகச் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.
இக்காலகட்டத்தில் கண்டெடுத்த பொருளைச் சொந்தமாக்கிக் கொள்ளும் மனநிலை பலரிடம் இருக்கும் சூழலில், பார்த்தீபனின் இந்த நேர்மையான செயல் பொலிஸாரையே வியப்பில் ஆழ்த்தியது.
சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிதர்சன் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்த விசாரணையில், அந்த நகையின் உரிமையாளர் ஏழாலைப் பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவர் என்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, அந்த முதியவரைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து, நகையை மீட்டெடுத்த பார்த்தீபனின் கைகளாலேயே அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொலைந்து போன தனது நகையை மீளப் பெற்றுக்கொண்ட முதியவர், அந்த இளைஞனுக்குக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். பார்த்தீபனின் இந்த மனிதாபிமானச் செயலை யாழ். மக்கள் கொண்டாடி வருகின்றனர்.




