அர்ச்சுனாவின் துப்பாக்கி நீதிமன்ற வசம்! விதிக்கப்பட்ட கடும் நிபந்தனைகள் – சட்டத்தரணி மணிவண்ணன் வெளியிட்ட விபரங்கள்!
யாழ்ப்பாணம் – பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற முரண்பாட்டின் போது பயன்படுத்தப்பட்ட பா. உ அர்ச்சுனா இராமநாதனின் கைத்துப்பாக்கியை, மல்லகம் நீதவான் நீதிமன்றம் சான்றுப் பொருளாகப் பொறுப்பேற்றுள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், குறித்த துப்பாக்கிக்கான அனுமதியை (License) இடைநிறுத்துவது அல்லது இரத்து செய்வது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
மக்கள் பிரதிநிதி ஒருவர் தனது பாதுகாப்பு ஆயுதத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியாரா? என்பது குறித்து நீதிமன்றம் அவதானம் செலுத்தியுள்ளது.
இன்றைய விசாரணையின் போது பா. உ அர்ச்சுனா இராமநாதன் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், அவருக்குக் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, வழக்கின் சாட்சிகளுக்கு எவ்விதமான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தக்கூடாது எனவும், நீதிமன்ற விசாரணைகளுக்குத் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி உரிமம் தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரை அவர் அந்த ஆயுதத்தைப் பயன்படுத்த முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.




