டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் – காவல்துறை அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு!
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர், முதன்முறையாக இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாகத் ‘தவெக’ தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புதுடெல்லிக்குச் சென்றடைந்தார்.
டெல்லி சென்றடைந்த முதலமைச்சருக்குத் தமிழ்நாடு இல்லத்தில் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்ததோடு, பிரமாண்ட காவல்துறை அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சற்றுநேரம் ஓய்வெடுக்கும் முதலமைச்சர் விஜய், இன்று மாலை 4.30 மணிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மேகதாது அணை விவகாரம் மற்றும் தமிழக நலன் சார்ந்த முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கவுள்ளார்.
பிரதமரைச் சந்தித்த பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சந்தித்துப் பேசவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நாளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரையும் டெல்லியில் சந்தித்துப் பேசவுள்ளார்.





