முடிவுக்கு வரும் மத்திய கிழக்கு யுத்தம்: எட்டப்பட்டது வரலாற்று ஒப்பந்தம்!
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தின் இறுதியான, ஒப்புக்கொள்ளப்பட்ட வரைவு உரை (Final Agreed Text) எட்டப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவிய காலகட்டம் முழுவதும் முதன்மை மத்தியஸ்தராக (Mediator) மிக ரகசியமாகச் செயல்பட்ட பாகிஸ்தான், தற்போது அடுத்தகட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை இறுதி செய்வதற்காக இரு தரப்புடனும் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“அமைதி என்பது முன்னெப்போதையும் விட இப்போது மிக அருகில் உள்ளது” என்றும், ஒப்பந்தத்தைக் குலைக்க நினைப்பவர்களின் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டியுள்ளதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அண்மைய அறிவிப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளன.
முன்னதாக ஓவல் அலுவலகத்தில் பேசியிருந்த அதிபர் ட்ரம்ப், அமெரிக்கா ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு சிறந்த சமரசத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் (X) தளப் பதிவில், அமெரிக்காவுடனான முதற்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முன்னெப்போதையும் விட மிக நெருக்கமாக உள்ளதாகவும், இந்த உடன்படிக்கையானது ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை நீக்குவதையும், ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மறுசீரமைப்பதையும் உள்ளடக்கியது என்றும் தெரிவித்துள்ளார்.





