வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டியுங்கள் – தேர்தல் ஆணையத்திற்கு விஜய் அவசரக் கடிதம்
தமிழகம் முழுவதும் இன்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நிலவும் போக்குவரத்து நெருக்கடி குறித்துத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது ஆழ்ந்த கவலையையும் சீற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் தங்களது ஊர்களுக்குச் செல்ல முடியாமல் சிக்கித் தவிப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
“தேர்தல் பணிக்காகப் பேருந்துகள் பெருமளவில் கையகப்படுத்தப்பட்டதால், பொதுமக்களுக்கான போக்குவரத்து முடங்கியுள்ளது; இது ஒரு திட்டமிட்ட தவறாகத் தெரிகிறது” என விஜய் தனது கடிதத்தில் கடுமையாகச் சாடியுள்ளார்.
வாக்காளர்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்கவும், போக்குவரத்துச் சிக்கலால் தாமதமாகும் மக்கள் வாக்களிப்பதை உறுதி செய்யவும், வாக்குப்பதிவு நேரத்தை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.





