ஈரானில் நடந்து வரும் ஹிஜாபிற்கு எதிரான போராட்டங்களில், 5 நாட்களில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 13ம் திகதி சரியாக ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்ட மஹ்சா அமினி என்ற இளம் பெண் மூன்று நாட்களுக்குப் பின்னர், மருத்துவமனையில் இறந்தார்.
இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் வெடித்து, வன்முறையாக மாறியுள்ளது.
ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க ஈரானிய பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
30 நகரங்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் பரவியுள்ளதால், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகின்றன.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், பெரும்பாலான நகரங்களில் பதற்றம் நீடிக்கிறது.
இந்தச் சம்பவங்களில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். 1,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறைக்கு எதிராக, ஈரான் இளைஞர்கள் ‘கர்ஷத்’ என்ற செயலியை உருவாக்கியுள்ளனர். இந்த செயலியை கடந்த 5 நாட்களில் 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இந்த செயலி மூலம், இளைஞர்கள் ஒருங்கிணைக்கப்படுவதால், தெஹ்ரானில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதுடன், சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளன.