Welcome to Jettamil

கடனை செலுத்தும் கால எல்லையை நீடிக்குமாறு சீனாவிடம் வேண்டுகோள்…

Share

பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, கடனை மீளச் செலுத்தும் காலஎல்லையை மறுசீரமைப்பது குறித்து, கவனம் செலுத்துமாறு, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சீன வெளிவிவகார அமைச்சர் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே, இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கோவிட் தொற்று காலத்தில் சீனாவிடமிருந்து கிடைத்த பொருள் மற்றும் நிதி உதவிகளுக்காக, சீன வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்தார்.

கோவிட் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக, இலங்கைக்கு சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்க சீன அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிய ஆதரவுக்கும், சீன அரசாங்கத்துக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

சீன சுற்றுலாப் பயணிகளை உயிர்க் குமிழிக்குள் மட்டுப்படுத்தி இலங்கைக்கு வரவழைப்பதற்கு உதவுமாறும், சீன வெளிவிவகார அமைச்சரிடம்  ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச கேட்டுக்கொண்டார்.

இலங்கை கோவிட் தொற்று நோய்க்கு முகங்கொடுத்துள்ள சூழ்நிலையில், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக கடனை மீளச் செலுத்துவதை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தினால், அது நாட்டுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, சீனாவிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளின் போது சலுகை வர்த்தகக் கடன் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தால், கைத்தொழிற்றுறையைத் தடையின்றி சீராக நடத்த முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு குறித்து சுட்டிக்காட்டிய வாங் யி, நெருக்கமான நண்பன் என்ற வகையில் சீனாவின் ஒத்துழைப்பு எப்போதும் இலங்கைக்கு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்த வாங் யி, எதிர்வரும் காலங்களில் அது நிறைவேறும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்தச் சந்திப்பில், சீனத் தூதுவர் கீ ஷென்ஹோங், பிரதி வர்த்தக அமைச்சர் கியான் கேமின் , உதவி வெளியுறவு அமைச்சர் வூ ஜியான்ஹோ, சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிப் பணிப்பாளர் சொன்ங் மோஓயு ஆகியோரும் பங்கேற்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை