அமெரிக்காவுடனான பேச்சு தோல்வி : ஈரானிலிருந்து ரஸ்ய அதிபர் புடினுக்கு பறந்த தகவல்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்படிக்கையுமின்றித் தோல்வியடைந்த நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்கா விதித்த நிபந்தனைகள் மற்றும் தோல்விக்கான காரணங்கள் குறித்த தனது மதிப்பீட்டை அவர் புடினிடம் பகிர்ந்து கொண்டதாகக் கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்க ரஷ்யா எடுத்து வரும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டிற்கும், வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகளுக்கும் ஈரான் அதிபர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த புடின், பிராந்தியத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்தவும், இராஜதந்திரத் தீர்வுகளை எட்டவும் ரஷ்யா தொடர்ந்து மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதற்காகப் பிராந்தியத்தில் உள்ள அனைத்துக் கூட்டாளிகளுடனும் ரஷ்யா தீவிரத் தொடர்பில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இந்த உரையாடலில் விவாதிக்கப்பட்டுள்ளது.




