இந்தியாவை உலுக்கிய துயரம் ; விமான விபத்தில் 5 விமானப் படை வீரர்கள் உயிரிழப்பு
இந்தியாவின் அசாம் மாநிலம் ஜோர்ஹட்டில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏஎன்-32 போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் 5 விமானப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஜோர்ஹட் விமானப் படை நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு இன்ஜின்கள் கொண்ட அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்து இந்திய விமானப் படை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இன்று காலை சுமார் 10 மணியளவில் வழக்கமான பயணத்தின் போது விபத்து ஏற்பட்டதாகவும், தற்போது மீட்புப் பணிகள் மற்றும் ஆரம்ப விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இறுதி விசாரணை முடிவுகள் வரும் வரை ஊகங்களை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த வீரர்களுக்கு இந்திய விமானப் படை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.





