பயணத்தில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை! – தூதுவர்களின் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்த ட்ரம்ப்
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தனது விசேட தூதுவர்களான ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் செல்வதை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீரென ரத்து செய்துள்ளார்.
இது குறித்துத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பயணத்திற்காக அதிக நேரம் வீணடிக்கப்படுகிறது; நிறைய வேலைகள் காத்திருக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
18 மணிநேரம் பறந்து சென்று எவ்வித முடிவும் இன்றிப் பேசுவதில் தமக்கு விருப்பமில்லை என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
ஈரானியத் தலைமைக்குள் பெரும் குழப்பமும், உட்கட்சிப் பூசலும் நிலவுவதாக ட்ரம்ப் சாடியுள்ளார்.
“யார் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை; எங்களிடம் அனைத்துத் துருப்புச் சீட்டுகளும் (Cards) உள்ளன, அவர்களிடம் எதுவுமில்லை” என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“அவர்களுக்குப் பேச விருப்பம் இருந்தால், அவர்களே எங்களை அழைக்கட்டும்” என்றும் அவர் கூறியுள்ளார். ஈரானிய வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய சில நிமிடங்களிலேயே ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





