போலி கொடியுடன் வந்த ரஷ்ய எண்ணெய் கப்பல்: மத்திய தரைக்கடலில் சிறைப்பிடித்த பிரான்ஸ்
மத்திய தரைக்கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த ‘விக்டர் மினின்’ (Viktor Minin) என்ற ரஷ்யாவிற்குச் சொந்தமான எண்ணெய் கப்பலை பிரான்ஸ் கடற்படை அதிரடியாகச் சிறைபிடித்துள்ளது.
இந்தக் கப்பல் ஆப்பிரிக்க நாடான கினியா-பிசாவு நாட்டின் போலி கொடியைப் பயன்படுத்தி, தனது உண்மையான அடையாளத்தை மறைத்து மசகு எண்ணெயைக் கடத்திச் செல்ல முயன்றபோது கச்சிதமாகப் பிடிபட்டுள்ளது.
உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளைத் தகர்ப்பதற்காக, ரஷ்யா உருவாக்கி வைத்துள்ள “நிழல் கப்பற்படை” (Shadow fleet) ஒன்றின் அங்கமாகவே இந்தக் கப்பல் செயல்பட்டதாக பிரான்ஸ் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
பிரான்ஸின் மார்சேய் (Marseille) துறைமுகத்திற்கு அருகில் வைத்து இடைமறிக்கப்பட்ட இந்தக் கப்பல், தற்போது விரிவான விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேசக் கடல்சார் சட்டங்களை மீறிச் செயல்படும் இத்தகைய கப்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரான்ஸ் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
இந்தக் கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் குறித்து பிரான்ஸ் சுங்கத் துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஏற்கனவே நிலவி வரும் இராஜதந்திரப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.





