228 பயணிகளுடன் தீப்பிடித்த சுவிஸ் விமானம்! அதிரடியாக செயற்பட்ட விமானிகள்
டெல்லியில் இருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்குப் புறப்படத் தயாராக இருந்த சுவிஸ் ஏர் விமானம் (LX147), நேற்று (25) அதிகாலை 1.08 மணியளவில் ஓடுபாதையில் வேகமெடுத்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஏர்பஸ் A330 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தின் ஒரு என்ஜின் திடீரென செயலிழந்ததுடன் தீப்பற்றியுள்ளது.
இதனை உடனடியாகக் கவனித்த விமானிகள், மின்னல் வேகத்தில் முடிவெடுத்து விமானத்தைச் சாமர்த்தியமாக ஓடுதளத்திலேயே நிறுத்திப் பாரிய அனர்த்தத்தைத் தவிர்த்துள்ளனர்.
விமானத்தில் இருந்த 228 பயணிகள் மற்றும் நான்கு குழந்தைகள் உடனடியாக அவசர கால வாயில்கள் வழியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த வெளியேற்ற நடவடிக்கையின் போது காயமடைந்த 6 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு குறித்து சுவிஸ் ஏர் நிறுவனம் மற்றும் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்றுப் பயண ஏற்பாடுகள் மற்றும் தங்குமிட வசதிகளை விமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.





