நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி! – பல மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை!
இலங்கையின் வடகிழக்குக் கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்னும் அதே இடத்தில் நீடிக்கிறது.
இதன் காரணமாக, இன்று (16-05-2026) மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவிலான ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அனுராதபுரம் மாவட்டத்தில் பல சுற்று மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





