மனைவியைப் பிடித்திருந்த தீய ஆவி; இலங்கையில் மூடநம்பிக்கையால் அரங்கேறிய சம்பவம்
இலங்கையில் பேயோட்டும் சடங்கு என்ற பெயரில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொஸ்கம பிரதேசத்தில் உள்ள பிரணகம மயானத்தில், சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் புதைகுழிகள் சிலரால் தோண்டப்பட்டு, அங்கு சடங்குகள் மேற்கொள்ளப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தவல்கொட கால்வாயில் மூழ்கி உயிரிழந்த குறித்த இரு இளைஞர்களின் உடல்கள் அந்த மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், சிலர் சுமார் இரண்டு அடி ஆழம் வரை புதைகுழிகளை தோண்டி சடங்கு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இளைஞர்களின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கொஸ்கம காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். இதன்போது, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அதிகாரிகள், சடங்குகளுக்கான பொருட்களுடன் வாகனங்கள் பயணித்த தகவல்களை கண்டறிந்துள்ளனர்.
விசாரணைகளில், கொஸ்கம வித்தியாலய மாவத்தையில் உள்ள வீட்டு உரிமையாளர் ஒருவர் சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கியதாகவும், தனது மனைவிக்கு ஏற்பட்டதாக நம்பப்பட்ட “தீய ஆவி” பாதிப்பை நீக்குவதற்காக மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த குழுவினர் சடங்கு மேற்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த நபர் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், நீதிமன்ற உத்தரவின் பேரில் தோண்டப்பட்ட புதைகுழிகளை மீண்டும் மூடுமாறும் உறவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கல்லறைகளில் இருந்த சவப்பெட்டிகள் சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் காரணமாக அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பேயோட்டும் குழுவினரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.





