பாவங்களை போக்கி செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் சித்ரா பௌர்ணமி
தோஷங்கள் நீங்கி யோகங்கள் பெற என்ன செய்ய வேண்டும்? இதோ முழுமையான விரிவான தகவல்கள்…
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வந்தாலும், சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு தனி மகத்துவம் உண்டு. சூரியன் உச்சம் பெற்று, சந்திரன் எவ்வித களங்கமும் இன்றி முழு பிரகாசத்துடன் ஜொலிக்கும் திருநாளே இந்த சித்ரா பௌர்ணமி.
சிவபெருமானின் 63 திருவிளையாடல்களில் முதலாவதான “இந்திரனின் பழி தீர்த்த படலம்” அரங்கேறியது இதே நன்னாளில்தான். அதுமட்டுமின்றி, மனிதர்களின் பாவ-புண்ணிய கணக்குகளை எழுதும் ‘சித்திரகுப்தர்’ அவதரித்ததும் இன்றைய தினமே!
அன்னை பார்வதி தேவி வரைந்த அழகிய ஓவியத்திற்கு, சிவபெருமான் தனது மூச்சுக்காற்றால் உயிர் கொடுக்க உருவானவரே சித்திரகுப்தர். எமதர்ம ராஜாவிற்கு உதவியாக, மனிதர்களின் செயல்களைத் துல்லியமாக கணக்கிடும் பணியை இவர் மேற்கொள்கிறார்.

நாளை மே 1, வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி தினத்தில்: வாசலில் மாக்கோலமிட்டு, பொங்கல் வைத்து வழிபாடு செய்யுங்கள். வாழை இலையில் முக்கனிகள், கூட்டு மற்றும் பால் பாயசம் படைத்து சித்திரகுப்தரை வணங்குவது சிறப்பு.
“நான் மலையளவு செய்த பாவத்தை கடுகளவு ஆக்குக; கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவு ஆக்குக!” என மனமுருகி வேண்டினால், ஆயுளும் செல்வமும் பெருகும் என்பது ஐதீகம்.
ஜோதிட ரீதியாக, மனதிற்கு காரகனான சந்திரனின் முழு அருளைப் பெற இந்த விரதம் மிகச்சிறந்தது.
பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிப்பதன் மூலம் மாங்கல்ய பலம் கூடும்.
செவ்வாய் அதிபதியாக கொண்ட சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால், திருமணத் தடை மற்றும் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இது சிறந்த பரிகாரமாகும்.
கேதுவின் அதிதேவதையான சித்திரகுப்தரை வணங்குவதால் நாக தோஷம், புத்திர தோஷம் நீங்கி தொழில் மேன்மை கிடைக்கும்.

ஏழை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனாக்களைத் தானமாக வழங்குவது உங்கள் புண்ணிய கணக்கை பலமடங்கு உயர்த்தும்.
“தீயவற்றைத் தவிர்த்து நல்லவற்றைச் செய்ய வேண்டும்” என்பதே இந்தச் சித்ரா பௌர்ணமி நமக்கு உணர்த்தும் பாடம். இந்த இனிய நாளில் சித்திரகுப்தரை வணங்கி எல்லா வளங்களையும் பெறுவோம்.





