யாழ். கடற்றொழிலாளர் மீது தமிழக மீனவர்கள் தாக்குதல் – கடத்திச் செல்லப்பட்டவரை கயிற்றால் கட்டி சித்திரவதை
யாழ்ப்பாணம் – பலாலி வடக்கிலிருந்து 15 கடல் மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மூன்று கடற்றொழிலாளர்கள் மீது, எல்லை தாண்டி வந்த தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கொ*டூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வாள்களால் வெட்டியும், பெற்றோல் கு*ண்டுகளை வீசியும் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாக்குதலின் போது, ஒரு கடற்றொழிலாளர் பலவந்தமாகத் தமிழகப் படகிற்குள் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். மற்ற இருவர் காயங்களுடன் தப்பி வந்துள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்ட யாழ். கடற்றொழிலாளரைக் கயிற்றால் கட்டி வைத்து, தமிழக மீனவர்கள் அடித்துத் துன்புறுத்தும் அதிர்ச்சி தரும் காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன.
முகத்தில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், தற்போது நாகப்பட்டினம் அரச மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் கீழையூர் காவல்துறையினர் அவரை மீட்டுள்ள போதிலும், கடற்றொழிலாளர்கள் இடையிலான இந்த மோதல் போக்கு வடபகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.




