போராடுவதற்கு முயன்ற யாழ். பல்கலை மாணவர்களுக்கு அச்சுறுத்தல்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த கலைப்பீட மாணவ பிரதிநிதிகளை விசாரணைகளிற்கு அழைத்து கலைபீட தலைவர் சி.ரகுராம் மாணவர்களை எச்சரிக்கை செய்து அச்சுறுத்தியுள்ளார்.
கலைப்பீடத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கான பாடங்களைத் தெரிவுசெய்வதில் 150 இற்கும் மேற்பட்ட மாணவர்களிற்கு மாணவர்கள் விரும்பிய பாடங்கள் கிடைக்கவில்லை என்று தங்களுக்குரிய பாடங்களை தருமாறு கோரிய கோரிக்கைகள் பலனளிக்காத நிலையில் மாணவர்கள் போராடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இவ் அழைப்பினை தங்கள் Whatsapp குழுக்களில் கருத்தாக பதிவிட்ட மாணவர்கள் மீது போராடுவது பல்கலைக்கழக விதிகளுக்கு எதிரானது, அவ்வாறு போராட முடியாதென்று கூறி பதிவிட்ட மாணவர்களை கலைப்பீடத் தலைவர் சி.ரகுராம் அவர்களால் அச்சுறுத்தும் வகையில் மாணவர்கள் உள்ள Whatsapp குழுவில் செய்தியொன்று பதிவிடப்பட்டுள்ளது. போராடுவதற்கு அழைத்த மாணவர் பிரதிநிதிகளும் இன்றைய தினம் ஒழுக்காற்று விசாரணைகளிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அலுலவக நேரம் இல்லாத இரவு வேளையில் அழைப்பு மேற்கொண்டு, நாளை (இன்று) காலை விசாரணைகளுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அலுவலக நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் இவ்வாறான விசாரணை அறிவிப்பு விடுத்தது முறையற்ற ஒரு செயலாக பார்க்கப்படுகிறது.
கல்வி உரிமை கேட்டுப் போய், போராடுவதற்கே உரிமை கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் என மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.