இலங்கை கிரிக்கெட் ‘A’ அணியில் சஜிந்தினி!
மன்னார் புனித பற்றிமா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான சதீஸ்குமார் சஜிந்தினி, இலங்கை கிரிக்கெட் சபை நடத்திய திறன் தேடல் திட்டத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டவர்.
23 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் குழாமில் ஏற்கனவே இடம்பிடித்திருந்த இவர், தற்போது இலங்கை மகளிர் ‘A’ அணிக்குள் நுழைந்துள்ளார்.
இவரது வேகம் மற்றும் பந்துவீச்சுத் திறமை குறித்துப் புகழ்ந்துள்ள பயிற்றுநர் ஹேமன்த தேவப்ரிய, அனுபவங்கள் மூலம் சஜிந்தினி இன்னும் முன்னேற்றம் காண்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து மகளிர் ‘A’ அணிக்கும், இலங்கை ‘A’ அணிக்கும் இடையிலான 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகள் தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளன.
சத்யா சந்தீப்பனி தலைமையிலான 15 பேர் கொண்ட வலுவான இலங்கை குழாமில் சஜிந்தினி வேகப்பந்துவீச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விஷ்மி குணரட்ன போன்ற நட்சத்திர வீராங்கனைகளுடன் இணைந்து விளையாடப் போகும் சஜிந்தினி, இத்தொடரில் தனது முத்திரையைப் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.




