ஜனாதிபதியோ, கிராம சேவையாளரோ.. சட்டத்திற்கு அனைவரும் சமம்! – அநுர!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்து வருகிறார்.
இந்தச் சூழலில் அரசு அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, “நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும் அல்லது ஒரு கிராம உத்தியோகத்தராக இருந்தாலும், அனைவரும் சட்டத்திற்கு கீழேயே இருக்க வேண்டும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நிலவிய ‘அதிகாரம் இருந்தால் தப்பிக்கலாம்’ என்ற கலாசாரம் மாற்றப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு குற்றச் செயல் தொடர்பாக விசாரணைக்கு அழைப்பதோ அல்லது வாக்குமூலம் பெறுவதோ பாரதூரமான குற்றம் அல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரசியல் அதிகாரம் படைத்தவர்களிடம் விசாரணை நடத்துவது ஏதோ மாபெரும் குற்றம் என்பது போன்ற மாயையை உருவாக்கச் சிலர் முயற்சிப்பதாகச் சாடினார்.
“ஏதேனும் ஒரு சம்பவத்தில் எனது பெயர் இருந்தால், என்னிடமும் விசாரணை நடத்துவதில் தவறில்லை” எனத் தனது வெளிப்படைத்தன்மையையும் அவர் பதிவு செய்துள்ளார். ஜனாதிபதியின் இந்தப் பேச்சு, ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் தனது அரசு பின்வாங்காது என்பதைக் காட்டுவதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.





